வர்த்தக வளர்ச்சிக்குப் புத்தாக்கமே நிறைவான வியூகம் எஸ்எம்இ கார்ப் மலேசியா முன்னெடுப்பு .

கோலாலம்பூர்,  

உயர்நிலை வளங்களைக் கொண்டிருக்கும் சிறு, நடுத்தர தொழில்துறைகளை (எஸ்எம்இ) மேலும் ஊக்கப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியில் நிறைவான வியூகங்களை அமைப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தெரிவித்துள்ளது.

இதற்காக சிலாங்கூர் மனிதவளங்கள் மேம்பாட்டு மையத்துடன் வியூக ஒத்துழைப்பை அது மேற்கொண்டுள்ளது. வர்த்தக வளர்ச்சியில் புத்தாக்கங்களை மேம்படுத்துவதுதான் இந்த வியூகப் பங்காளித்துவத்தின் முக்கிய நோக்கமாகும் என்று சிலாங்கூர் மனிதவளம் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநர் தே சூக் லிங் தெரிவித்தார்.

இதன் தொடர்பான முதலாவது கருத்தரங்கம் இங்கு பிளாட்டினம் செண்ட்ரலில் உள்ள எஸ்எம்இ கார்ப் மலேசியத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 எஸ்எம்இ தொழில்துறையினர் பங்கேற்றனர். உற்பத்தியை அதிகரிக்கும் வியூகங்களைக் கொண்டிருக்கும் புத்தாக்கங்களைக் கடைப்பிடிக்கும் உள்நாட்டு எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்தக் கருத்தரங்கம் வடிவமைக்கப்பட்டது. 

அதேசமயம் 13ஆவது மலேசியத் திட்டத்தில் உள்நாட்டு எஸ்எம்இ நிறுவனங்களை உருமாற்றம் செய்வதற்குரிய ஓர் அகன்ற திட்டத்தை இணைப்பதற்கு எஸ்எம்இ கார்ப் மலேசியா முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. தேசிய எல்லைகளுக்கு அப்பால் தங்களது பொருட்களைச் சந்தைப்படுத்துவதை அதிகரிப்பதற்கு சிறு, நடுத்தர தொழில்துறைகளுக்கு இதன்மூலம் ஒரு விரிவான வாய்ப்புகளைப் பெற்றுத்தர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் புத்தாக்க கற்றல் திட்டங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவது, நிறைவான வர்த்தக வியூகங்களில் புத்தாக்கங்களை விதைப்பது. புத்தாக்கம், தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது தொடர்பான நடைமுறைத் திட்டங்களை அறிமுகம் செய்வது ஆகியவை அடங்கும் என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் பின் டத்தோ நைனி கூறினார்.

இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு இதுவே சரியான தருணம் என்பதை எஸ்எம்இ கார்ப் மலேசியா நம்புகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். புத்தாக்க வியூகங்கள் வழி நாட்டின் எஸ்எம்இ தொழில்துறைகளை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்து உலக அரங்கில் போட்டித்தன்மைகளை அதிகரித்து தேசியத் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகும் என்றார் அவர். எஸ்எம்இ கார்ப் மலேசியா – சிலாங்கூர் மனித வளங்கள் மேம்பாட்டு மையம் இடையிலான இந்தப் பங்காளித்துவமானது உயர்திறன் கொண்ட புத்தாக்கங்கள் நிறைந்த தொழில்துறையை வளர்ச்சி பெறச் செய்வதற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக ரிஸால் குறிப்பிட்டார்.

மேலும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மலேசியா உருமாற்றம் காண்பதற்கு பக்கபலமாக இருப்பதற்கும் இந்தப் பங்காளித்துவம் பெரும் துணையாக இருக்கும். அதேசமயத்தில் இன்றைய வணிகத் துறைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார் அவர்.

இதனிடையே வரும் 2025 ஜூலை, ஆகஸ்டு மாதம் கோலாலம்பூரில் இதேபோன்ற கருத்தரங்குகள் அடுத்தடுத்து நடத்தப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தே சூக் லிங் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கு பற்றி மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு www.smecorp.guv.my எனும் வலைத்தளத்தை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here