News By கிருஷ்ணன் ராஜு
பாசிர் கூடாங்,
பாசிர் கூடாங் அரசு மருத்துவமனை (HPG) ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கட்டமாக செயல்படத் தொடங்கும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கெஃப்லி அமட் அறிவித்தார்.
500 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனை (HSA) மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை (HSI) ஆகியவற்றுக்குப் பிறகு, மூன்றாவது அரசு மருத்துவமனையாகும்.
முதற்கட்ட நடவடிக்கையாக, 70 விழுக்காடு முக்கிய மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன. அவை பொதுச்சிகிச்சை, சிறுநீரக வைத்தியம், அவசர சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை, அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியவை. இது, தற்போது அதிக சுமையைச் சந்தித்து வரும் HSA மற்றும் HSI மருத்துவமனைகளின் சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20.6 ஹெக்டேரில் பரந்து விரிந்துள்ள இந்த மருத்துவமனை 304 படுக்கைகள், 14 நிபுணத்துவ பிரிவுகள், 36 ஊழியர் குடியிருப்புகள், 50 தாதியர் விடுதிகள், 1,507 கார் நிறுத்த இடங்கள், 320 மோட்டார் சைக்கிள் நிறுத்த இடங்கள் மற்றும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நிறுத்த வசதிகளுடன் நவீன வசதிகளை கொண்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக 1,800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலையான இடமாற்றத்தில் உள்ளனர். முக்கிய நிபுணர்கள் தங்களது பதவிகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முழுமையாக மருத்துவமனை செயல்படுவதற்கான திட்டங்கள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
“இந்த புதிய மருத்துவமனை திட்டம், மக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் உறுதியை பிரதிபலிக்கிறது,” என அவர் கூறினார்.
மேலும், சுல்தானா அமினா மருத்துவமனை 2 (HSA 2) திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தற்போதில் முன்னேற்றத்தில் இருப்பதாகவும், அது பாதுகாப்பு அமைச்சகம் ஒதுக்கிய நிலத்தில் கட்டுவதற்கான திட்டமிடல் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதியுதவியில் உருவாகும் இந்த மருத்துவமனை, ஜோகூர் மக்களுக்கு தரமான, அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்கும் புதிய அங்கீகாரம் பெற்ற கட்டுமானமாக அமையும்.







