கோலாலம்பூர்,
மூத்த பிரஜைகள் மசோதா வரைவை மத்திய அரசாங்கம் நிறைவு செய்திருக்கிறது. மூத்த பிரஜைகளின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரைவு மசோதாவை இவ்வாண்டு இறுதிக்குள் அட்டர்னிஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு தம்முடைய அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.
இப்போதைக்கு தம்முடைய அமைச்சு சபா, சரவாக் உட்பட அனைத்து மாநில அரசாங்கங்கள், துறை சார்ந்தவர்கள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஏற்கெனவே இத்தரப்பினருடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டிருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்கு மறு ஆலோசனை நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த மசோதா தீபகற்ப மலேசியாவில் மட்டும் ஆய்வுக்கு உட்பட்டதல்ல. சபா, சரவாக் மக்களின் நலன்களும் இதில் அடங்கியிருப்பதால் அம்மாநில அரசாங்கங்களின் ஆலோசனைகள் பெறப்படும். என்று மூத்த பிரஜைகளுக்கான பராமரிப்பு. ஆதரவு மீதான ஆசியான்- கொரிய குடியரசு மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர்” செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நொராய்னி அமாட், ஆசியானுக்கான கொரிய குடியரசுத் தூதர் லீ ஜாங் கியூன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூத்த பிரஜைகளை பராமரிப்பதற்கு அவர்களின் நலன்களைப் பேணுவதற்கு விரிவான ஆலோசனை தேவை என்று டத்தோஸ்ரீ நான்சி குறிப்பிட்டார். இதில் நாம் அவசரப்பட முடியாது. இது சட்டமாவதற்கு முன் முறையான ஆலோசனைகள் பெறப்படவேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் சொன்னார்.

























