பசுமைப் பொருளாதாரத்திற்கு புத்தாக்க அணுகுமுறை ஙா கோர் மிங் அறைகூவல் .

வியன்னா,

பசுமைப் பொருளாதாரத்திற்கு புத்தாக்க அணுகுமுறைகள் தேவை என்று ஐநா வாழ்விடப் பேரவைத் தலைவர் என்ற முறையில் மலேசிய வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்று அறைகூவல் விடுத்தார். குறைந்த கார்பன் தொழில் பூங்காக்கள் மேம்பாட்டிற்கு ஐநா தொழில்துறை மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்குக் கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

வியன்னாவில் நடைபெறும் 2025 உலக மாநகரங்கள் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு ஐநா தொழிலியல் மேம்பாடு அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெர்ட் புல்லருடன் அமைச்சர் இருவழி பேச்சு நடத்தினார். இங்கு வியன்னா அனைத்துலக மையத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஐநா கீழ் இடம்பெற்றுள்ள 20 அனைத்துலக அமைப்புகளின் கேந்திர முக்கியத்துவமிக்க இல்லமாக வியன்னா அனைத்துலக மையம் திகழ்கிறது.

இந்தச் சந்திப்பின்போது ஐநா தொழிலியல் மேம்பாட்டு அமைப்புக்கான பசுமைத் தொழில்துறை தொழிலியல் கட்டடங்கள் – ஐநா வாழ்விடப் பேரவை ஆகியவற்றுக்கு இடையிலான ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக வழிகாட்டி தேவை என்ற பரிந்துரையை ஙா கோர் மிங் முன்வைத்தார். இதனை மேம்படுத்தி உருவாக்க வேண்டிய ஓர் அவசியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தேசக் கட்டமைப்பின் கீழ் ஐநா வாழ்விடப் பேரவையானது உலகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கிடையே ஒரு நிரந்தரமான அமலாக்கத்தை ஏற்பதை ஐநா வாழ்விடப் பேரவை முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதேசமயம் ஐநா தொழிலியல் மேம்பாட்டு அமைப்பு ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டட வடிவமைப்பை உறுதிசெய்யும் பணியை மேற்கொள்ளும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த உத்தேசப் பரிந்துரையானது தொழிற்சாலைகளில் இருந்து கார்பன் வெளியாக்கத்தைக் குறைப்பதுதான் நோக்கமாகும். அதேசமயம் கார்பன் குறைந்த தொழிலியல் பூங்காக்களை உருவாக்குவதும் அதன் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாகும் என்று அமைச்சர் விளக்கமளித்தார். இந்தப் பரிந்துரையை புல்லர் ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். 

அதேசமயத்தில் நிலைத்தன்மைமிக்க மேம்பாடானது வேலை வாய்ப்புகளை உருவாக்கி கிராமம் அல்லது புறநகர்ப் பகுதிகள் என்ற வேறுபாடு இன்றி பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்பதையும் ஙா கோர் மிங் சுட்டிக்காட்டினார். பசுமைத் தயாரிப்பு, விவசாயம் சார்ந்த தொழில்துறை ஆகியவற்றின் வழி உருமாற்றம் செய்வதில் ஐநா தொழில்துறை மேம்பாட்டு அமைப்புக்கு முக்கியப் பங்கு இருப்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த இலக்கை நோக்கி நாம் செயல்படுவதற்கு இதுவே சரியான தருணம். வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பசுமை, ஆரோக்கியமிக்க நகரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் நம்முடைய பாதையில் ஒரு பகுதியாக ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

2017ஆம் ஆண்டில் ஐநா வாழ்விடப் பேரவை – ஐநா தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான கையொப்பமிடப்பட்ட  புரிந்துணர்வு மகஜரைப் உயிர்ப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பில் ஒரு பரஸ்பர உடன்பாடு காணப்பட்டது.

இதனிடையே ஙா கோர் மிங், வியன்னா மேயர் டாக்டர் மைக்கல் லுட்விக்கை கோலாலம்பூர் மாநகர் மன்ற மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷாரிப், ஆஸ்திரியா சுலோவேக்கியா நாடுகளுக்கான மலேசியத் தூதர் இக்ராம் முகமட் இப்ராஹிமுடன் மரியாதை நிமித்தம் சந்தித்தார். வியன்னா மேயராக மைக்கல் லுக் விக் மீண்டும் தேர்வு பெற்றதற்கு ஙா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here