கோலாலம்பூர்,
உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய உயர்கல்வி அறவாரியம் PTPTN நாட்டில் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடங்கி இருக்கும் மாணவர்களுக்கு முன்பணத்தைக் கடனுதவியாக வழங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் இத்திட்டத்தின் கீழ் தலா 1,500 ரிங்கிட்டைப் பெறுவர் என்று பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார்.
பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைக்கவும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான முன்னேற்பாடுகளுக்கும் இந்தத் தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், மலேசியப் பிரஜை மாணவர்களுக்கு மட்டுமே இந்த முன்பணக் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார்.

இவர்களின் பெற்றோர் ரஹ்மா ரொக்க உதவித்தொகை (எஸ்டிஆர்) பெறுபவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் வழி இந்தக் கடனுதவியைப் பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் மாணவர்களுக்கு 1,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கியது. 2025 31ஆம் தேதி வரை 990,638 மாணவர்கள் மொத்தம் 1.46 பில்லியன் ரிங்கிட்டைப் பெற்றிருக்கின்றனர் என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா கூறினார்.
2025 ஜூலை மாதம் அரசாங்கப் பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளோமா கல்வியைத் தொடங்கவிருக்கும் 31,850 மாணவர்களுக்கு 47.8 மில்லியன் ரிங்கிட்டை PTPTNஒதுக்கி இருக்கிறது. myPTPTN என்ற செயலி வழி முன்பணக் கடன் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேசமயம் 2025 ஜூலை 2ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதிலும் உள்ள பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் வங்கிகளில் இதற்கான கடிதம் அல்லது மாணவர் மை கார்ட் ஆகியவற்றைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முன்பணக் கடனுதவித் திட்டமானது 2025 ஜூலை 2ஆம் தேதி தொடங்கி 2025 செப்டம்பர் 1ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் டத்தோஸ்ரீ நோர்லிஸா கூறினார். பினாங்கு, புக்கிட் குளுகோர் பகுதியில் உள்ள PTPTNதலைவருடன் டத்தோஸ்ரீ நோர்லிஸா ஒரு மாணவியின் வீட்டிற்கு நேரில் வருகை புரிந்து முன்பணக் கடனுதவித் திட்டத்திற்கான கடிதத்தை வழங்கினார்.
அனைத்துத் தரப்பினரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதை உறுதி செய்வதில் PTPTN எப்போதும் அதீத கடப்பாட்டையும் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இந்த உதவியைப் பெறுபவர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்து பார்க்காமல் PTPTNஅதன் பொறுப்புடைமையை நிறைவேற்றி வருகிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா கூறினார். பினாங்கில் 1,419 மாணவர்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 2.13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. புக்கிட் குளுகோர் பகுதியில் மட்டும் 87 மாணவர்கள் 130,500 ரிங்கிட்டைப் பெறுபவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.



















