News By S.Gunalan
பட்டர்வொர்த்,
வராஹி அஸ்ட அம்மன் நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ காளியம்மன் – சங்கிலி கருப்பன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலை நோக்கி, ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் ஏந்தி பக்திபரவசத்துடன் ஊர்வலமாக பங்கேற்றனர். மேளதாள ஒலியுடன் நேற்று இரவு 8 மணியளவில் இந்த ஊர்வலம் ஆரம்பமாகியது. கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 5 வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெற்ற நவராத்திரி விழாவில் யாகம், மந்திர உச்சரிப்பு, அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நான்கு குருமார்களின் தலைமையில் நடைபெற்றன. இறுதி நாளில், பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் தவிர, யாஸ்மின் தங்கத் தாலி தட்டையும் காணிக்கையாகக் கொண்டு வந்து, வராஹி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும், ஒன்பது சீர் தட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.
ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் 102 ஆண்டுகளாக பழமை வாய்ந்ததாகும். தமிழ் மக்களின் அதிக வாழ்விடம் ஆகியிருந்த காலத்தில், இது மரத்தடியில் அமைந்த ஒரு சிறிய ஆலயமாக இருந்து வந்தது. பின்னர், செட்டியார் சமூகத்தினர் அடுக்கு மாடி வீடுகளை கட்டியபோதும், ஆலயத்திற்கு இடம் ஒதுக்கி, 19 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடமாக எழுப்பியதாக ஆலய நிர்வாகத் தலைவர் கருணன் கெங்காயா தெரிவித்தார். மேலும், வராஹி அம்மன் சிலை தஞ்சாவூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் உருவாக்கப்பட்டு, முறையான மந்திர உச்சரிப்புடன் ஸ்தாபிக்கப்பட்டதையும் அவர் கூறினார்.

இந்த ஆலயத்தில் வழிபடும் வராஹி அம்மன், ஒன்பது நவக்கன்னியர்களில் ஐந்தாவது கன்னியாக மதிக்கப்படுகிறார். “படைத்தலைவி” எனப் போற்றப்படும் இவரை தமிழகத்தில் ராஜராஜ சோழன் பக்தியுடன் வழிபட்டதாக நம்பப்படுகிறது. வராஹி அம்மனுக்கான நைவேத்தியமாக, பூமியில் வளரும் கிழங்கு வகைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இவரது ஆன்மிக சிறப்பாகும். மனதில் சோகம், துன்பம், கவலை போன்ற இடர்களுடன் வாழ்பவர்கள் வராஹி அம்மனை உளமார வழிபட்டால், அந்த இடர்கள் அகன்று மனநிறைவு கிடைக்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர்.
நவராத்திரி விழாவை ஒட்டி யாகம், அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா முடிவில், ஆலய நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்காக இரவு உணவு வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து பக்தர்களின் ஒத்துழைப்பால் ஆன்மிக விழாக்கள் வெற்றிகரமாக நடைபெற முடிகின்றதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்தது.









