விமானங்களின் பராமரிப்பு, பழுது பார்ப்பு (MRO), பயிற்சி மற்றும் வினியோகம் தொடர்பான செயற்பாடுகளுக்கான மையமாக மலேசியாவை உருவாக்க, ஏர்பஸ் (Airbus), எம்ப்ராயர் (Embraer) போன்ற விமான உற்பத்தி நிறுவனங்களை அரசாங்கம் ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரேசிலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மேற்கொண்ட சந்திப்பில் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தங்களைத் தவிர, அவை நாட்டுக்கு முதலீடாகவும் பயனுள்ளதாகவும் அமைய அரசாங்கம் வலியுறுத்துகிறது என்றார்.
மேலும் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏரேஷியா (AirAsia) நிறுவனம் US$12.25 பில்லியன் மதிப்புள்ள 321XLR விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதே நேரத்தில் மலேசியா ஏவியேஷன் குழுமமான (MAG), மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக 40 A330neo விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
அத்துடன், ஏர்பஸ் நிறுவனம் மலேசியாவில் ஏற்கனவே பயிற்சி மற்றும் MRO மையங்களை நடத்தி வருகின்றது. மேலும், மலேசியாவை ‘final assembly line’ மையமாகக் கருத்தில் கொள்ளவும் பிரான்ஸ் அரசு மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நாட்டின் ஏரோஸ்பேஸ் துறையை வளர்க்கும் என்றும், மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.









