பி.ஜே. செக்ஷன் 19 மாரியம்மன் ஆலயம்: திட்டவரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதும் விளக்கக் கூட்டம்

எஸ். வெங்கடேஷ்

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 19 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கட்டுமானப் பணிக்கான திட்டவரைவுக்கு பெட்டாலிங் ஜெயா நகராண்மைக்கழகம் ஒப்புதல் அளித்தபின்பு சுற்றுவட்டார மக்களை அழைத்து நாங்கள் விளக்கக் கூட்டம் நடத்துவோம் என ஆலய நிர்வாகத்தினர் நேற்றுத் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த ஆலய விவகாரத்தில் நிர்வாகத்தினர் எங்களுக்கு முறைப்படி பதில் அளிக்கவில்லை. பல ஆண்டுகளாக ஆலயக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் இருப்பதாகக் கூறி சுற்றுவட்டார மக்கள் நேற்று முன்தினம் ஆலயத்தின் முன்புறம் ஒன்றுகூடி கேள்வி எழுப்பினர்.

இதனை அடுத்து நேற்று ஆலய நிர்வாகத் தரப்பினர் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய ஆலயச் செயலாளர் ராமன் முனியாண்டி, தற்போதைய ஆலயத் தலைவர் கந்தன் அழகர் கடந்த 2020ஆம் ஆண்டுதான் ஆலயத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அதற்கு முன்னதாகவே ஆலயத் திருப்பணிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இருப்பினும் கடந்தாண்டு இறுதியில்தான் ஆலயத்திற்கான நிலப்பட்டாவை நாங்கள் முறைப்படி பெற்றோம்.

அதன்பிறகு கட்டுமானப் பணிக்கான திட்டவரைவு வரைந்து ஒப்புதல் பெற பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம். ஒப்புதல் வந்த பிறகே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் அதற்குள் ஒருசிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் பேசுகின்றனர்.

திட்டவரைவுக்கு ஒப்புதல் கிடைக்கப்பட்டதும் நாங்களே (நிர்வாகத்தினர்) சுற்றுவட்டாரப் பொதுமக்களை அழைத்து விளக்கக்கூட்டத்தை நடத்துவோம். அந்தக் கூட்டத்தில் கட்டுமானப் பணிகள் குறித்து விளக்கம் அளிப்போம். அப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் அதுவும் திட்டவரைவுக்கு ஒப்புதல் பெறப்படுவதற்கு முன்னதாகவே மறியலில் ஈடுபடுவது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த வெள்ளிக்கிழமை எம்.சிவா எனும் அத்தரப்பு நபருடன் நாங்கள் சந்திப்பு நடத்தி பேசினோம் என்றார் அவர். இந்நிலையில் திட்டவரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதும் கட்டுமானப் பணிக்குழு முறைப்படி அமைக்கப்படும். அந்தப் பணிக்குழுவில் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் தாராளமாக இணைந்துகொள்ளலாம். அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆலயத்தின் நலனுக்கு ஒத்துழைப்போம் எனவும் ராமன் கூறினார்.

இதனிடையே இந்த ஆலயத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட நபர் ஒட்டுமொத்த மக்கள், பக்தர்களைக் குள்ளநரிக் கூட்டம் என்று சாடவில்லை. மாறாக கடந்த 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது ஒருசிலர் மாநகர் மன்றத்திடம் மறைமுகமாகப் புகார் அளித்தனர். இதனால் அப்போது அந்தக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

அந்த ஒருசிலரைச் சுட்டிக்காட்டிதான் நாங்கள் நியமித்த ஆலோசகர் பேசியுள்ளார் என்று ஆலயத் தலைவர் கந்தன் விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here