தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுபடுத்தி குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தில் வெளியிடப்பட்ட மணிநேர அளவீடுகளின்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி எட்டு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தி குறியீட்டு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன. மலாக்கா அலோர் காஜாவில் 160 ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தெமர்லோ, பஹாங் (156); பந்திங், சிலாங்கூர் (155); நிலாய், நெகிரி செம்பிலான் (155); கெமாமன், தெரெங்கானு (153); ஜோஹன் செத்தியா, சிலாங்கூர் (152); செராஸ், கோலாலம்பூர் (151);புத்ராஜெயா (124) இதற்கிடையில், 57 பகுதிகளில் மிதமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான API அளவீடு நல்ல காற்றின் தரத்தைக் குறிக்கிறது. 51-100 மிதமான, 101-200 ஆரோக்கியமற்ற, 201-300 மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் 300 க்கு மேல் ஆபத்தானது. மலேசியாவின் சில பகுதிகளில் புகை மூட்டம் பரவுவதற்கு காரணமான அதிகரித்து வரும் காடுகள் மற்றும் நிலத் தீயை எதிர்த்துப் போராட, இந்தோனேசியா இன்று ரியாவ் மாகாணத்தில் மேக விதைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த நடவடிக்கை குறைந்தது ஏழு நாட்களுக்கு தொடரும் என்று தெரிவித்தார். இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை, புவி இயற்பியல் நிறுவனத்தின் தரவுகள் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமத்ரா முழுவதும் 1,208 தீ விபத்து இடங்களைக் குறிப்பிட்டுள்ளன. அவற்றில் 586 ரியாவில் மட்டும் அமைந்துள்ளன.
இந்தோனேசிய ஒளிபரப்பாளரான மெட்ரோ டிவி, இந்தத் தீ விபத்துகளிலிருந்து வரும் புகை மூட்டம் ஏற்கெனவே மலேசியாவின் சில பகுதிகளை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஜெனரல் வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் புகை, புகைமூட்டம் நுழைந்ததால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகக் கூறினார். நாட்டில் பெரிய அளவிலான தீ விபத்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.









