கோலாலம்பூர்:
பினாங்கு கடற்பகுதியில் RM6.1 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டின்கீழ் இரு இந்தோனேசிய மீனவர்கள் மீது பாலிக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதியப்பட்டது.
மாஜிஸ்திரேட் சியா ஹுய் திங் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசித்துக்காட்டப்பட்ட போது, இர்ஃபான்ஷா (வயது 30) மற்றும் ஜுனைடி (வயது 51) ஆகிய இரு சந்தேக நபர்களும் குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாக தலை அசைத்தனர்.
கடந்த ஜூலை 17, மாலை 7:15 மணியளவில் தெலுக் கும்பார் (Teluk Kumbar) கடற்பகுதியில் 113.776 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாக முதலாவது குற்றச்சாட்டு சுமத்த்தப்பட்டது.
இரண்டாவது குற்றச்சாட்டில் அதே இடம், நாள் மற்றும் நேரத்தில் 33.412 கிலோ திரவ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றச்சாட்டு.
இவ்விரு குற்றச்சாட்டுகளும் 1952 ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன், மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் சந்தேக நபர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.






















