
ஜகார்த்தா,
சமீபத்திய தாய்-கம்போடியா மோதல் தொடர்பில், தெற்காசிய நாடுகளின் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாம் செயல்பட்டதாக மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

அரசியல் அழுத்தங்களோ, உலக முன்னணி நாடுகளின் தலையீடுகளோ இந்த நிகழ்வில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லை எனவும், நேரடி பேச்சுவார்த்தை மூலமாகவே சிறந்த புரிந்துணர்வு ஏற்பட்டது எனவும் அவர் வலியுறுத்தினார்.
“நான் தீர்வில் மட்டும் கவனம் செலுத்தினேன். அதைத்தான் சீனா மற்றும் அமெரிக்காவிடம் தெரிவித்தேன்,” என அன்வார், இன்று இங்கே நடந்த மலேசிய-இந்தோனேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் (ISWAMI) மற்றும் முக்கிய ஊடக தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கூறினார்.
ஜூலை 24 அன்று, கம்போடியா பிரதமர் ஹுன் மாணெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தாம் வெச்சயாசாயைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டதாகவும், அதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தற்காலிகமாக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“தங்கள் படைகளை திரும்ப அழைக்கும் கால அவகாசம் அவர்கள் கேட்டார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக, அடுத்த நாளே (ஜூலை 25) மோதல் மீண்டும் வெடித்தது,” என அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த ceasefire அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தினால்தான் ஏற்பட்டது என்ற வதந்திகளை அவர் முற்றிலுமாக மறுத்தார். குறிப்பாக, கம்போடியா மற்றும் தாய்லாந்து மீது வரி தடைகள் விதிக்கப்படும் எனும் எச்சரிக்கையின் பின்னணியில் இது நடந்ததாக கூறப்பட்டு வந்தது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகியவை, மலேசியாவில் பிரதமர் அன்வார் தலைமையில் புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இந்த சந்திப்பு சர்வதேச ஊடகங்களில் பரவலான கவனத்தை பெற்றது. குறிப்பாக, இந்தோனேசிய ஊடகங்களும், மலேசியாவின் அமைதிப் பணியில் பிரதமர் அன்வார் விளம்பரமில்லாத துணிச்சலுடன் செயல்பட்டதை பாராட்டின.




















