பட்டதாரிகளுக்கு அதிக ஊதியம்: இயக்கவியலுக்கேற்ப தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த மனிதவள அமைச்சு முயற்சி !

கோலாலம்பூர்:

வேகமாக வளர்ந்து வரும் இயக்கவியல் (Automation) மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, உயர்கல்வி பட்டதாரிகளின் திறன்களை மேம்படுத்தி அவர்களை வேலைவாய்ப்புச் சந்தைக்குத் தயார்படுத்துவதில் மலேசிய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து மேலவையில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நாட்டின் மனிதவள மேம்பாடு என்பது வெறும் தரவுகளை மட்டும் சார்ந்திராமல், தொழில்துறையின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக, ‘MyMahir’ எதிர்காலத் திறன் திறமையாளர் மன்றம் (FSTC) மூலம் சுமார் 59,000 தொழிலாளர் தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப பயிற்சித் திட்டங்கள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்தை அடைய, மனிதவள அமைச்சின் கீழ் உள்ள HRD Corp மற்றும் TalentCorp ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து பல்வேறு உயர்தரப் பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ‘Internship Training Scheme’ (ITS) மூலம் முதலாளிகளின் நேரடித் தேவைகளுக்கு ஏற்ப நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதேவேளையில், ‘MyMahir SkillsLab’ திட்டத்தின் கீழ் தரவு பகுப்பாய்வு (Data Analytics), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற அதிநவீன துறைகளில் பட்டதாரிகளுக்குத் தீவிரப் பயிற்சிகளும், நேரடித் திட்டப்பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சித் திட்டங்களின் சிறப்பம்சமாக, இதில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்கள் மற்றும் பணி அமர்த்தல்களுக்கான உறுதியான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு முறையாகப் பயிற்சி பெற்று பணியில் அமர்த்தப்படும் பட்டதாரிகளுக்கு, சந்தையின் சராசரி ஆரம்ப ஊதியத்தை விட 5 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார். இது பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாக அமையும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here