வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சின் தொடர் முயற்சிகளால் ரெசிடென்சி ஹெக்தார் கோம்பாக் வீடமைப்புத் திட்டம் உயிர்பெற்றது

கோலாலம்பூர்,

தேசிய வீடமைப்பு இலாகா, கைவிடப்பட்ட – முடங்கிப்போன வீடமைப்புத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் சிறப்பு பணிப்படை ஆகியவற்றின் வழி வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் தொடர் முயற்சிகளின் பயனாக கைவிடப்பட்ட ரெசிடென்சி ஹெக்தார் வீடமைப்புத் திட்டம் வெற்றிகரமாக உயிர்ப்பெற்றிருக்கிறது. மொத்தம் 2,400 வீடுகளை கட்டி முடிப்பதற்கு 125 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சிக்கலான நிதிப் பிரச்சினைகள், தொழில்நுட்ப கலந்தாய்வுகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு கைவிடப்பட்ட – முடங்கிப் போன வீடமைப்புத் திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் சிறப்புப் பணிப் படை ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான தொடர் முயற்சிகள் பலன் தந்திருக்கின்றன என்று அந்த வீடமைப்புப் பகுதிக்கு நேரில் வருகை புரிந்த அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்குகிறது. இத்திட்டத்தின் பிரதான குத்தகை நிறுவனமான ஷரிக்காட் பீனா பெர்மாய் சென்டிரியான் பெர்ஹாட் கட்டுமானப் பணிகளை தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

விலாயா வீடுகள் திட்டத்தின் கீழ் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 2,400 வீடுகளை ரெசிடென்சி ஹெக்தார் கோம்பாக் உள்ளடக்கியிருக்கிறது. இத்திட்டத்தை ஹெக்தார் அநேகா சென்டிரியான் பெர்ஹாட் என்ற மேம்பாட்டு நிறுவனம் 2018ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆனால், கூட்டரசுப் பிரதேச இலாகா கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் 2022 மே மாதம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வீடுகளின் விற்பனை – கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படுவது தோல்வி கண்டது. இருப்பினும் இன்றைய இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இந்த வீடமைப்புத் திட்டம் புத்துயிர் பெற்றிருப்பதை இன்று நாம் காண்கிறோம். இது தவிர, இத்திட்டத்தில் வீடு வாங்கியிருப்போருக்கு ஒரு புதிய நம்பிக்கையை தந்திருக்கிறது என்று ஙா கோர் மிங் கூறினார்.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு வீடு வாங்கும் பொது மக்களின் நலன்களில் எப்போதும் பரிவுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தாமதமாகும் அல்லது கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் உயிர்ப்பித்து வீடு வாங்கியிருக்கும் மக்களின் சுமைகளை குறைப்பதற்கும் அவர்களுக்கு நம்பிக்கை தருவதற்கும் வீடமைப்பு ஊராட்சித் துறை அதீத அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் வங்கிகளில் பெறப்பட்டிருக்கும் கடனுக்கு அவர்கள் தொடர்ந்து தவணை பணத்தை வட்டியோடு செலுத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய சுமை என்பதை அமைச்சு உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே நாடு முழுவதும் கைவிடப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் பிரச்சினைக்குரிய வீடமைப்புத் திட்டங்களை மீண்டும் உயிர்ப்பித்து மக்களுக்கு அதனை வழங்குவதில் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு உறுதியாக இருக்கிறது.
குறைந்த வருமானம் பெறுகின்ற தரப்பினர் சொந்த வீடுகளில் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதுதான் மடானி அரசாங்கத்தின் விருப்பமும் இலக்கும் ஆகும் என்றார் அவர்.

சபாவில் தாமான் பி.ஆர்.ஆர். புத்ரா கியான்சோமில் 22 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட முடங்கிப் போன வீடமைப்புத் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்திருப்பது அமைச்சின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

அதேசமயம், சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் 245 தோட்டப் பாட்டாளிகளுக்கான ஹர்மோனி மடானி மக்கள் வீடமைப்புத் திட்டத்தையும் வீடமைப்பு ஊராட்சித் துறை முன்னெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் இந்தப் பாட்டாளிகள் போராடி வந்தனர். டத்தோஸ்ரீ அன்வாரின் மடானி அரசாங்கம் இத்திட்டத்தின் வழி அவர்களுக்கு ஒரு மன நிம்மதியை தந்திருக்கிறது என்று ஙா கோர் மிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here