இதுபற்றி டிரம்ப் கூறும்போது, ‘இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இரண்டு நாடுகளும் தங்களின் மோசமான பொருளாதார நிலையை இணைந்து இன்னும் மோசமாக்கும். அவர்களது பொருளாதாரம் செத்த பொருளாதாரம். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வர்த்தகத்தையே செய்துள்ளோம். ஆனால் அவர்களின் வரிகள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானது மற்றும் அருவருப்பானது.
ஒருபக்கம் இந்தியாவுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் டிரம்ப், இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு வரிச்சலுகை அறிவித்து இருப்பதுடன், பாகிஸ்தான் நாட்டுடன் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா கொடுத்த பதிலடி நடவடிக்கையால் இருநாடுகள் இடையே 4 நாட்களாக நடந்த போரை நான் தான் நிறுத்தினேன் என்று கிட்டத்தட்ட 30 தடவை டிரம்ப் கூறிவிட்டார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று பாக்.ராணுவ தளபதி அசிம் முனீருக்கு நடைமுறைகளை மீறி வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளார். தற்போது பாகிஸ்தானுக்கு சலுகை மேல் சலுகையாக வரிச்சலுகை அறிவித்து இருப்பதும், பாகிஸ்தானில் எண்ணெய் கிணறு அமைக்கவும் அமெரிக்க முடிவு செய்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப்பின் அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்று கூறி பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில்,’ அமெரிக்காவில் நமது இரு தரப்பினரும் வெற்றிகரமாக முடித்த வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பங்காற்றியதற்காக அதிபர் டிரம்புக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மைல்கல் ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும். இதனால் வரும் நாட்களில் நமது நீடித்த கூட்டாண்மையின் எல்லைகளை விரிவுபடுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது, சந்தை அணுகலை விரிவுபடுத்துவது, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்,’நாங்கள் இப்போதுதான் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு உருவாக்கவுள்ளோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் கிடங்காக அமையும். இதை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்’ என்று தெரிவித்தார்.










