புத்ராஜெயா,
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதற்காக அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கர் தெரிவித்தார்.
அமலாக்கத்தில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க, நிதியமைச்சும் பொருளாதார அமைச்சும் இணைந்து இந்த திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளன. இது தொடர்பான அறிக்கைகள் ஆண்டில் இருமுறை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“13வது மலேசியத் திட்டம் 2030 வரை நடைமுறையில் இருக்கும் ஒரு நீண்டகால திட்டமாகும். எனவே, திட்டங்கள் திட்டமிட்டபடி செயல்படுவதை உறுதி செய்வது நமது முக்கிய நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்றும், செயல்பாட்டில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் எச்சரித்தார்.
இன்று நடைபெற்ற ஓட்டப்பந்தய நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் நேரில் சென்று திட்டங்களை பார்வையிடுவதோடு, திடீர் ஆய்வுகளையும் மேற்கொள்வோம். மக்களுக்கு சேவை செய்வதே நமது முக்கிய நோக்கம். அதனால் நிர்வாக இடையூறுகள் இன்றி, திட்டங்கள் முழுமையாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும்,” என்றார்.
2026 முதல் 2030 வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கான 13வது மலேசியத் திட்டம், மக்களின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வெள்ளத்தடுப்பு திட்டங்கள், சாலை வசதி உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் அடங்கும். இத்திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.





















