பெட்டாலிங் ஜெயா,
டிவெட் (TVET) கொள்கை விவாதத்திற்காக அம்னோ தலைமையகத்துக்குச் சென்ற 30 DAP எம்.பிக்கள் குறித்து MCA துணைத்தலைவர் Mah Hang Soon வழங்கிய அவமதிக்கும் கருத்துகள் குறித்து Kampar தொகுதி எம்.பி. Chong Zhemin கடுமையாக விமர்சித்துள்ளார்.
DAP எம்.பிக்களை “infatuated schoolgirls”மற்றும் “so aroused it shows” எனக் கூறி, மாஹ் ஹாங் சூன் அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சோங் கூறினார். இது ஒருமித்த அரசாங்க செயல்பாடுகளின் நடுவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“ஆகஸ்ட் 1 அன்று, துணை பிரதமரும் தேசிய TVET கவுன்சிலின் தலைவருமான ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடந்த இந்த சந்திப்பு, முழுமையாக கொள்கை விவாதத்திற்காகத்தான் இருந்தது” என்று சோங் செமின் தெரிவித்துள்ளார்.
DAP எம்.பிக்களின் வருகையின் நோக்கம், TVET கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, வளங்களின் ஒழுங்கான பகிர்வு, அமைச்சுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பவற்றை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு நடந்தது என்றும், இதை அரசியல் இலாபமாக பார்க்கக்கூடாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், அம்னோ தலைமையகம் என்பது ஜாஹிட்டின் அதிகாரபூர்வ அலுவலகங்களில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டிய சோங், இதற்கு முன் MCA தலைவர்களும் அதே இடத்திற்கு சென்றபோது மாஹ் ஹாங் சூன் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கேள்வியெழுப்பினார்.
இந்த சந்திப்பில் DAP தலைமைச்செயலாளர் லோக் ஸியூ ஃபூக், ஆலோசகர் லிம் குவான் எங், துணைத் தலைவர் சோங் சியெங் ஜென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே நேரத்தில் அம்னோவை சேர்ந்த துணைத் தலைவர் ஜொஹாரி கானி, பொதுச்செயலாளர் அஸ்ரஃப் வாஜ்டி துசுகியும் கலந்து கொண்டனர்.



















