குவாந்தான்,
பஹாங் மாநிலம் பெல்டா புக்கிட் குவாந்தான் பகுதியில் ஒரு வீட்டில், மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் போலீஸ் அதிகாரி ஒருவர் பரிதாபமாக வெட்டிக் காயப்படுத்தப்பட்டார்.
பாஞ்சிங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கார்ப்பரல் மொகமட் ஷஃப்ரில் இசுவான் இஸ்மாயில் (வயது 37) என்பவர், தனது முதுகு, மற்றும் இடது கை விரல்களில் காயங்களுடன் Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என பகாங் போலீஸ் தலைமைத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவிட்த்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில், அந்த வீட்டில் ஒருவர் கத்தியுடன் பீதியூட்டும் வகையில் நடமாடுவதாக புகார் வந்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்ற போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
“நிலைமை அமைதியாக இருப்பதை உறுதி செய்ய முயன்ற போது, அந்த நபர் திடீரென போலீசாரை தாக்கினார்,” என்று யஹாயா தெரிவித்தார்.
பின்னர், 37 வயதான அந்த வேலையில்லா சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து பல கூரிய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மனநல சோதனைக்காக சந்தேக நபர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், ஆயுதத்துடன் காயம் விளைவித்ததற்கான பேனல் கோட் பிரிவு 324ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



















