ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கலுக்குத் தீர்வு கண்டதில் மகிழ்ச்சி: கோபிந்த்

பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கலுக்குத் தீர்வு கண்டதில், தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.  நமது குழந்தைகள் நல்ல சூழலில் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே நமது இலக்கு. அனைவரின் ஒத்துழைப்புடன், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டத்தில் செயல்பட வேண்டும் என்கிற கனவு நனவாகும் என்று நான் நம்புகிறேன்என அவர் கூறினார்.

இந்தப் பள்ளி தொடர்பாக, கடந்த வாரம் அமைச்சரவைகூட்டத்தில் எட்டப்பட்ட முடிவானது, நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசாங்கத்தின் உறுதிபாட்டை எடுத்துரைக்கிறது.  இந்த நெடுங்காலச் சிக்கலைத் தீர்க்க, முக்கியப் பங்காற்றிய கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அவர்களுக்கும், துணை அமைச்சர் வோங் கா வோஹ் அவர்களுக்கும் தமது நன்றியை கோபிந் சிங் பதிவு செய்தார். முயற்சியை கைவிடாமல்,பொறுமையோடு புதிய பள்ளி கட்டத்திற்காக தொடர்ந்து போராடிய ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் திரு. நடேசன் கந்தசாமி மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பை அமைச்சர் கோபிந் சிங் டியோ பாராட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் எதிர்கொண்ட சவால்களை தாம் புரிந்து கொண்டதாகவும், பள்ளி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.

இலக்கவியல் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தாம், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் பட்சத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்ட பணிகள் சீராகவும் துரிதமாகவும் முடிவடைவதை உறுதி செய்ய, கல்வி அமைச்சு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் தாம் துணை நிற்பதோடு, தொடர்ந்து கண்காணிப்பதாகவும் உறுதி கூறினார். இந்தப் பள்ளிக்கு அரும்பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டினையும் மீண்டும் பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here