கோலாலம்பூர்,
கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைபேசி வழி மோசடிகளால் மலேசியர்கள் அரை பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர் என்று போலீஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
2023 முதல் 2025 ஜூன் வரை 7,473 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் RM532,765,591.07 இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
“2023ஆம் ஆண்டில் மட்டும், RM158.8 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் 3,027 புகார்கள் பதிவாகி, 1,139 நபர்கள் கைது செய்யப்பட்டனர்,” என்றார் அவர்.
2024ஆம் ஆண்டில் மோசடி சம்பவங்கள் சற்று குறைந்து 2,825 ஆக இருந்தாலும், இழப்புத் தொகை RM142.2 மில்லியன் ஆக அதிகமாக இருந்ததாகவும், அதற்குடன் 1,281 பேர் கைது செய்யப்பட்டதாகவும் முஹமட் இசா கூறினார்.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, 1,621 தொலைபேசி மோசடி சம்பவங்கள் காவல்துறையால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் மட்டும் RM72.95 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்காக 713 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள் தொலைபேசி மோசடி வழக்குகள் நாட்டில் எவ்வளவு தீவிரமாகப் பரவி வருகின்றன என்பதற்கான அதிர்ச்சி தரும் சாட்சி என அவர் சுட்டிக்காட்டினார்.




















