கோலாலம்பூர்,
மலேசியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த (PKS) தொழில்முனைவோர்களுக்கு, MyMall என்ற இணையவழி வணிக தளத்தின் மூலம் இலவசமாக தங்கள் வர்த்தகங்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது, விற்பனைச் செலவுகளால் ஏற்படும் பொருளாதார அழுத்தத்திலிருந்து தொழில்முனைவோரின் நலன்களைப் பாதுகாக்க MyMall தளம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
அவரது அமைச்சு 2022-ஆம் ஆண்டில் MyMall தளத்தை அறிமுகப்படுத்தியதாகவும், இது நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு இலவச மின் வணிக சந்தைப்படுத்தல் வாய்ப்பை அளிக்கின்றதாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு இலக்கவியல் தொழில்முனைவோர் சுற்றுச்சூழலை உருவாக்கும் முக்கிய தளமாக விளங்குகிறது. 2025ஆம் ஆண்டு ஜூலை 31 நிலவரப்படி, 3,407 வணிகர்கள் MyMall தளத்தில் பதிவு செய்து, மொத்தம் RM24.3 மில்லியன் மதிப்புள்ள விற்பனையை நிகழ்த்தியுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இது 2024-ஆம் ஆண்டின் ஏழு மாதங்களில் ஏற்பட்ட RM15 மில்லியன் விற்பனையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
அண்மையில், பிரபல மின் வணிக தளங்கள் விற்பனையாளர்களிடம் வசூலிக்கும் கமிஷன் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்து, ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹவ் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே டத்தோ ஸ்ரீ ரமணன் இவ்வாறு தெரிவித்தார்.




















