மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மிக சிறந்த நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. வேண்டும் வரங்களையும், அரச பதவியையும் பெற்றுத் தரும் சிறப்புமிகுந்த விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. இந்த விரதம் எப்படி உண்டானது என்ற கதையை தெரிந்து கொண்டு வரலட்சுமி விரதம் இருப்பது இந்த விரதத்தின் முழு பலனையும் கிடைக்க செய்யும்.விரதங்களிலேயே மிகவும் உயர்வான விரதம் என்றும், அனைத்து வகையான செல்வ நலன்களையும் தரக் கூடிய விரதம் என்றும் சிவ பெருமானே பார்வதி தேவியிடம் குறிப்பிட்டு சொன்ன விரதம் தான் வரலட்சுமி விரதம்
இது ரிஷிகளோ, முனிவர்களோ மனிதர்களுக்கு சொன்ன விரதம் கிடையாது. செல்வங்களுக்கு அதிபதியான மகாலட்சுமியே உலக மக்களின் நலனுக்காக எடுத்துச் சொன்ன விரதம் தான் வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை எப்படி இருக்க வேண்டும், இந்த விரதத்தை இருப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றும் மகாலட்சுமியே எடுத்துரைத்துள்ளார். வரலட்சுமி விரதம் அன்று அத தோன்றிய கதைகளை கேட்டாலும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அது மிகப் பெரிய புண்ணியம் ஆகும். வரலட்சுமி விரதம் இருந்தால் செல்வ நலன்கள் மட்டுமல்ல, அரச பதவியே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
வரலட்சுமி விரதம் உருவானது பற்றி பல புராண கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் அதிகமானவர்களால் சொல்லப்படுவது ஷியாமாவின் கதை தான். செளராஷ்டிரா நாட்டு மன்னன் பத்ரஷர்வா, மிகப் பெரிய விஷ்ணு பக்தன். அவரது மனைவி சந்திரிகா. இவர்களின் மகள் ஷியாமா. சாந்த குணம் கொண்டவளான சந்திரிகா ஒரு நாள் துவாதசி நாளில் வயிறு முழுவதும் சாப்பிட்டு, அரண்மனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு வயதான சுமங்கலி பெண் உருவில் மகாலட்சுமி, சந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். அந்த பெண்ணை உபசரித்த சந்திரிகா, என்ன வேண்டும் என கேட்டாள். அதற்கு மகாலட்சுமியோ, துவாதசி திதியில் இருப்பதை விடுத்து இப்படி வயிறு நிரம்ப சாப்பிட்டு இருப்பது சரியா என கேட்டுள்ளார். இதனால் கேமடைந்த சந்திரிகா, மகாலட்சுமியை அவமதித்து அனுப்பி விடுகிறாள்.
வேதனையுடன் அங்கிருந்த புறப்பட்டு சென்ற மகாலட்சுமியை கண்ட ஷியாமா, அவரை மறித்து என்ன நடந்தது என விபரம் கேட்டாள். உனது தாய் என்னை அவமதித்து விட்டாள். அதனால் நான் இனி இங்கு இருக்க மாட்டேன் என சொல்லி புறப்பட்ட மகாலட்சுமியிடம், எனது தாயிடம் நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள். அதை என்னிடம் சொல்லுங்கள். நான் சொல்கிறேன் என மிகவும் அடக்கத்துடன் கேட்டாள். இதனால் மனம் குளிர்ந்த மகாலட்சுமிக்கு, வரலட்சுமி விரதம் இருக்கும் முறையை சொல்லி சென்றார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களிலேயே ஷியாமா திருமணம் முடிந்து, தனது கணவர் வீட்டிற்கு சென்றாள். அங்கு மகாலட்சுமி சொன்னபடி வரலட்சுமி விரதத்தையும் தொடர்ந்து கடைபிடிக்க துவங்கினாள். அதோடு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபட்டு வந்தாள். இதன் காரணமாக மகாலட்சுமியின் அருள் அவளுக்கு பரிபூரணமாக கிடைத்தது.
அதே சமயம் மகாலட்சுமியை அவமதித்த பாவத்திற்காக, சந்திரிகாவும் அவரது கணவரும் அனைத்து செல்வங்களையும் இழந்து, நாட்டையும் இழந்து, அங்கிருந்து வெளியேறி காட்டிற்குள் வசித்து வந்தனர். இதை அறிந்த ஷியாமா தனத பெற்றோரை அழைத்து வந்து, தனது நாட்டில் தங்க வைத்து அடைக்கலம் கொடுத்தாள். பிறகு ஒரு பானை நிறைய தங்க காசுகள் நிரப்பி, அதை பெற்றோரிடம் கொடுத்து எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளும் படி கூறினாள்.
ஆனால் ஷியாமா கொடுத்த பானையை சந்திரிகா திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க காசுகள் முழுவதும் கரித்துண்டுகளாக மாறி இருந்தது. இதனை கேள்விப்பட்ட ஷியாமா, அவளது தாயிடம் மகாலட்சுமியை அவள் அவமதித்ததை நினைவுபடுத்தினாள். அதனால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்பட்டதாக கூறியதுடன் வரலட்சுமி விரதத்தை இருக்கும் முறைகளை சொல்லி அதை முறையாக கடைபிடிக்க சொன்னாள். மகள் கூறியபடி சந்திரிகாவும் வரலட்சுமி விரதம் இருந்ததால் அவர் இழந்த செல்வங்கள் அனைத்தும் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.




















