கோலா திரெங்கானு,
இங்குள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 26 வயது மாணவி, Touch ‘n Go பிரதிநிதியாக நடித்து மோசடி செய்த தொலைபேசி கும்பலால் RM187,800 இழந்தார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி, மாணவிக்கு ஒரு சந்தேக நபர் தொலைபேசியில் அழைத்தார். அந்த நபர், ‘நீங்கள் பயன்படுத்திய செயலியை (app) தவறாக பயன்படுத்தியுள்ளீர்கள், நீங்கள் பணச் சலவை (money laundering) மற்றும் போதைப் பொருள் கடத்தல் (drug trafficking) செயல்களில் ஈடுபட்டிருப்பதாக எங்கள் system இல் பதிவாகியுள்ளது என குற்றம் சாட்டினார்.
பிறகு, அந்த மோசடி நபர், மாணவியை பயமுறுத்தி, “நீங்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள், உங்கள் பெயரைத் எங்கள் சிஸ்டத்தில் இருந்து நீக்க பணம் அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.பீதியடைந்த மாணவி, தனது சேமிப்பு மற்றும் பெற்றோரின் கணக்கிலிருந்து (அவர்களுக்கு தெரியாமல் ) பணம் எடுத்து, ஆகஸ்ட் 4 முதல் 9 வரை எட்டு முறை, ஆறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தார்.
அதேபோல், ஆகஸ்ட் 9-ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது தாயாருக்குச் சொந்தமான மூன்று வளையல்கள், ஐந்து மோதிரங்கள், ஒரு லாக்கெட்டை, பெண் சந்தேக நபருக்கு சிட்டியூ, பந்தாய் பெனாரிக் சாலையில் ஒப்படைத்தார். அங்கு வந்திருந்த முகக்கவசம் அணிந்திருந்த அந்த பெண்ணை அடையாளம் காண முடியவில்லை.
பொதுமக்கள் எளிதில் நம்பாமல், சந்தேக நபர்கள் வழங்கும் தொலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை சரிபார்க்க “Semak Mule” செயலியை பயன்படுத்தவும், மூன்றாம் நபர் கணக்குகளுக்கு பணம் அனுப்புவதற்கு முன் 997 என்ற தேசிய மோசடி பதில் மைய ஹாட்லைனை தொடர்புகொள்ளவும் என போலீசார் அறிவுறுத்தினர்.





















