சாரா கைரினா மரண விசாரணையை அரசியலாக்க வேண்டாம் – துணைப் பிரதமர் ஃபடில்லா

கூச்சிங், 

13 வயது மாணவி சாரா கைரினா மஹாதீரின் மரணம் தொடர்பான விவகாரத்தை அரசியலாக்காமல், விசாரணையை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு போதுமான அவகாசம் அளிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது, சாராவின் மரணத்துக்கு தொடர்பான தடயவியல் விசாரணையும், சபா மாநில போலீசார் முன்னதாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்பட்ட அலட்சியங்கள் குறித்த மறுஆய்வும் தற்போது புக்கிட் அமான் போலீசாரின் கீழ் சீராக நடைபெற்று வருகின்றன.

“இந்த விசாரணையை புக்கிட் அமான் போலீசார் நேர்த்தியான முறையில் நடத்தி வருகின்றனர். முன்னதாக சபா போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காணப்பட்ட அலட்சியங்களுக்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனையும் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது யாராவது குற்றம் சாட்டப்படுவார்களா இல்லையா என்பதை தான் கவனிக்க வேண்டிய தருணம் இது,” என்று அவர் தெரிவித்தார்.

ஃபடில்லா இன்று சரவாக், கூச்சிங்கில் உள்ள அமினுடின் பாக்கி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மடானி நிர்வாகக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இதை கூறினார்.

அவர் மேலும், சட்ட விதிகளுக்கு ஏற்ப விசாரணையை வழக்கம்போல் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் யாரும் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயலக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here