கோலாலம்பூர்:
சுகாதாரப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க, மலேசியாவின் எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏஜென்சி (AKPS), காவல்துறை, சுங்கம், மாகிஸ் (MAQIS), குடிநுழைவுத்துறை மற்றும் கடல்சார் அதிகாரிகள் உள்ளிட்டச் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட் (Datuk Seri Dr. Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சுகாதாரப் பொருட்கள் கடத்தலின் ஆபத்துகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சமீபத்தில், AKPS, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), பதிவு செய்யப்படாத RM85,000 மதிப்புள்ள மருந்துகளைக் கடத்த முயன்ற ஒரு கும்பலைப் பிடித்தது. இதற்கு முன்பு, கடந்த வாரம், 60,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளையில், சுகாதார அமைச்சர், மூவாரில் உள்ள சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனைக்கு (Sultanah Fatimah Specialist Hospital – HPSF) வருகை தந்தார். வட ஜோகூரின் பிரதான மருத்துவமனையாகச் செயல்படும் இந்த மருத்துவமனை, 575 படுக்கைகளையும், 18 நிபுணத்துவ சேவைகளையும் கொண்டுள்ளது. இதனிடையே, அதன் தயார்நிலை குறித்து, அமைச்சர் மதிப்பாய்வு செய்தார்.





















