மலேசியப் பள்ளிகளில் பகிடிவதை, கேலி மற்றும் கொடுமைப்படுத்தல் என்பவற்றை நிறுத்த அவசர நடவடிக்கை தேவை: UNICEF

கோலாலம்பூர்:

மலேசியாப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பகிடிவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவை பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதால், அதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று UNICEF வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கொடுமைப்படுத்தல் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த மலேசியாவிற்கான UNICEF பிரதிநிதி ராபர்ட் காஸ், இதன் விளைவுகள் மிகவும் சோககரமானதாக இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார்.

“எந்த குழந்தையும் பள்ளியில் தன் பாதுகாப்பிற்காக பயப்படக்கூடாது. எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை வீடு திரும்புமா என்று கவலைப்படக்கூடாது. பள்ளிகள் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இடங்களாக இருக்க வேண்டும்; அங்கு குழந்தைகள் கற்றுக்கொண்டு, வளர்ந்து, கண்ணியத்துடன் நட்பை வளர்க்க வேண்டும்,” என காஸ் கூறினார்.

2018-ம் ஆண்டில் UNICEF நடத்திய ஓர் ஆய்வில், கொடுமைப்படுத்துதல் தங்கள் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக பிள்ளைகளே அடையாளப்படுத்தியிருந்தனர். மேலும், தேசிய சுகாதார மற்றும் நோய் ஆய்வு 2022-ன் படி, கடந்த ஒரு மாதத்திலேயே 8.6% மாணவர்கள் கொடுமைப்படுத்தலுக்கு உள்ளானதாக புகாரளித்துள்ளனர்.

சமீபத்திய ஊடகச் செய்திகள், மலேசியாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வெளிப்படுத்துகின்றன. மேலும், தொழில்முறை சமூகப் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆலோசகர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் காஸ் கூறினார்.

அரசின் தற்போதைய முயற்சிகளைப் பாராட்டிய அவர், அதேசமயம் குழந்தை மையக் கொள்கைகள் மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் மலேசியாவிற்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பயமற்ற கல்விக்கான உரிமையை உறுதி செய்வதே முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here