கோலாலம்பூர்:
இந்தோனேசியாவில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய வீட்டு வசதி உபகார தொகை, மாதம் ஒன்றுக்கு 50 மில்லியன் ரூபியா (தோராயமாக RM15,000) வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் மோதினர்.
இந்தத் தொகை, ஜாகர்த்தாவின் குறைந்தபட்ச ஊதியத்தை விட, கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும். இந்த வாரத்தில் மட்டும், இரண்டாவது முறையாக நடந்த இந்தப் போராட்டத்தில், பெரும்பாலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, போராட்டக்காரர்கள், கற்கள், பட்டாசுகள், மூங்கில் குச்சிகளை வீசினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, பதிலுக்கு, காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகள், நீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்தி, கூட்டத்தைக் கலைத்தனர், இருப்பினும், மோதல்கள், பின்னர், வணிகப் பகுதிகளுக்கும் பரவின.
தற்போது, அரிசி, கல்வி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்துள்ளது. மேலும், ஜவுளித் துறையில் நடந்த, பெருமளவிலான ஆட்குறைப்பு, இந்தோனேசியாவின் பொருளாதார நிலைத்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய காரணங்களால், மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான கடும் கோபம் அதிகரித்துள்ளது.





















