டெல்லியில் மீண்டும் ஊரடங்கு!

டெல்லியில், வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில், ஓமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, 100-க்கு கீழ் பதிவாகி வந்த கொரோனா தினசரி பாதிப்பு, தற்போது 4,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று, ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்ததாவது: டெல்லியில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அரசுத் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்படுகின்றனர். தனியார் நிறுவனங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.

பொது மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில், 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

டெல்லியில் ஓமைக்ரான் பரவல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த எட்டு முதல் 10 நாட்களில், 11 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here