சிட்னி –
இணையத்தில் நிர்வாணப் படங்களை உருவாக்கவும், பெண்களைப் பின்தொடரவும் (stalking) பயன்படும் செயலிகள் மற்றும் சாதனங்களை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாகும் தீவிர அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் புதிய சட்டத்தை உருவாக்குவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. எனினும், அந்தச் சட்டத்தின் அமலாக்கத்திற்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
“மக்களை, குறிப்பாக பிள்ளைகளை அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும், தவறாகப் பயன்படுத்தவும் உதவும் எந்த செயலிகளுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் இணையத்தில் இடமில்லை,” என்று ஆஸ்திரேலிய தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் உதவியால், சில செயலிகள் ஒருவரின் உடையை மின்னணு முறையில் அகற்றி நிர்வாண படங்களாக உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இத்தகைய பாலியல் தொடர்பான தீங்கு விளைவிக்கும் செயலிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, சிறுவர்களை இலக்காகக் கொண்ட தவறான பயன்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெல்ஸ் கூறுகையில், அத்தகைய ஆபத்தான செயலிகளின் அணுகலைக் கட்டுப்படுத்த அரசு தேவையான அனைத்தையும் செய்யும். இதற்கான பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இணையத்தில் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா உலகளவில் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு (நவம்பர் 2024), 16 வயதுக்குக் குறைந்தவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை அந்த நாடு அமல்படுத்தியிருந்தது.





















