பேராக், சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்தி சுட்டு தப்பித்த ஒருவரின் காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான விசாரணைக்கு உதவ, ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் இவர்களில் முக்கிய சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அவர்களின் பங்கைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபருக்கும் இறந்தவருக்கும் இடையிலான உறவு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று டிவி3 அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
62 வயதான உயிரிழந்த பெண், டொயோட்டா அவன்சாவின் பின் இருக்கையில், தலை ஒரு பிளாஸ்டிக் பையில் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் மூச்சுத் திணறலால் இறந்ததாக கண்டறியப்பட்டது.
போலீசார் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுள்ளதாக நூர் ஹிசாம் தெரிவித்தார். சிம்பாங் பூலாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்பட்ட காரை போலீசார் பின்தொடர்ந்த பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்த மறுத்து, அதற்கு பதிலாக வேகமாக ஓட்டிச் சென்று, பின்னர் ஒரு செம்பனை தோட்டத்திற்கு அருகில் நிறுத்தினார்.
பின்னர் அவருக்கும் ஒரு போலீஸ்காரருக்கும் இடையே ஒரு சண்டை வெடித்தது. பின்னர் ஓட்டுநர் போலீஸ்காரரின் சர்வீஸ் பிஸ்டலைப் பறித்து அவரைச் சுட்டதோடு 26 வயது போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, பின்னர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றார்.









