ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் மின்சிகரெட்டுகள், பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், அவை அப்புறப்படுத்தப்படும் போது சுற்றுச்சூழலுக்கும் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
நிபுணர்கள் கூறுவதாவது, பயன்படுத்தப்பட்ட மின்சிகரெட்டுகளைப் பொறுப்பற்ற முறையில் துறக்கப்படும்போது அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருட்கள், லித்தியம் மின்கலன்கள், வேதிப்பொருள்கள் போன்றவை மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன. மேலும், அவை தீ விபத்துகளுக்கும் காரணமாக அமையக்கூடும்.
மலேசியாவில் தற்போது 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட பெரியவர்களும், நூற்றுக்கணக்கான சிறுவர்களும் மின்சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். ஆனால், பயன்படுத்தப்பட்ட பிறகு அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சிகரெட்டுகளைச் சரியாக கையாளாமல் இருப்பது தீ அபாயத்தை அதிகரிக்கிறது என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகம்மது எச்சரித்தார்.
2023-ஆம் ஆண்டில் குப்பைக் கிடங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டுக் கழிவுகளில் 1.15% அபாயகரமான கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது என்று திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலிட் முகம்மது தெரிவித்தார்.
“அதில் மின்னணுக் கழிவுகள் 0.83% ஆகவும், மீதமுள்ள 0.32% மின்கலன்கள், ஏரோசால் டின் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியவை,” என்று அவர் குறிப்பிட்டார்.
திரு. காலிட் மேலும், குப்பைக் கிடங்குகளில் அதிக அளவில் காணப்படும் ஐந்து முக்கியக் கழிவுகள் உணவு, நெகிழி, காகிதம், ஒருமுறை பயன்படுத்தும் டயப்பர்கள் மற்றும் தோட்டக் கழிவுகள் என விளக்கினார்.
சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை நிபுணர் டாக்டர் தேங் லீ சோங் கூறுகையில்:
“பெரும்பாலான மின்சிகரெட்டுகள் நெகிழிப் பொருட்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. அவை குப்பைக் கூளங்களில் வீசப்பட்டாலும் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் குப்பைக் கிடங்குகள் மற்றும் அப்புறப்படுத்தும் இடங்களில் குவிவதே அதிகம்.”
அவர் மேலும், மின்சிகரெட்டுகளில் உள்ள லித்தியம் மின்கலன்கள் மிக எரிபொருள் தன்மை கொண்டவை; அவை வெடிப்பு அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.





















