(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் ம.இ.கா. வேட்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தாமான் புக்கிட் இண்டா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவருடன் பாரிசான் நேஷனல், ம.இ.கா., அம்னோ, ம.சீ.ச. நிர்வாகிகள், ஆலய நிர்வாகத்தினர், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
உரையாற்றிய மந்திரி பெசார், ஜோகூர் அரசாங்கம் இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் ஒரே குடும்பமாகக் கருதி செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் மக்களை தோலின் நிறத்தின் அடிப்படையில் பார்ப்பதில்லை. அனைவரும் ‘பங்சா ஜோகூர்’ என்ற ஒரே அடையாளத்தின் கீழ் வாழ்கிறோம். அனைத்து சமூகங்களுக்கும் சமமான உரிமையும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கமாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள், ஆலயங்கள், கல்வி, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில அரசு தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், எந்த சமூகமும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ம.இ.கா. வேட்பாளர் பன்னீர்செல்வம், மக்களின் நம்பிக்கையை செயல்பாட்டின் மூலம் நிரூபிப்பேன் என்றார்.
“நான் அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் தந்தையின் பெயரை நம்பி அரசியலுக்கு வரவில்லை. என் சொந்த முயற்சியாலும் மக்களுடனான சேவையாலும் இந்த நிலையை அடைந்துள்ளேன். வெற்றி பெற்றால், பெர்லிங் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் வலியுறுத்தும் மக்கள் பிரதிநிதியாக இருப்பேன். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைவருக்கும் சமமான சேவையை வழங்குவேன்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பெர்லிங் தொகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், ஆலயங்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
நிகழ்வில் பேசிய பலரும், பன்னீர்செல்வம் இந்திய சமூகத்தின் மட்டுமல்லாது, பெர்லிங் தொகுதியின் அனைத்து மக்களுக்கும் குரல் கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினராக திகழ்வார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
அவர்கள், ஜோகூர் மாநில அரசின் இந்திய சமூக நல நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினர். சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்ட பல்வேறு உதவிகள், இறுதிச் சடங்கு உதவித் திட்டங்கள், சமூக நல முயற்சிகள், ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் ஆகியவை இந்திய சமூகத்திற்கு பெரும் பயனளித்து வருவதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு தாமான் புக்கிட் இண்டா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கும் மாநில அரசு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ அசோஜன், ம.சீ.ச. தேசிய மகளிர் பிரிவுத் தலைவி வோங் யூ போங், பூலாய் அம்னோவைச் சேர்ந்த ஷேக் நாஃபிக்ஸ், இளைஞர் தலைவர் பிரிபு, ஆலய நிர்வாகத் தலைவர் அன்பழகன், பி.பி.பி. பொருளாளர் சுசேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, பெர்லிங்கில் ம.இ.கா. வேட்பாளர் பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவு வழங்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

பெர்லிங் தொகுதியில் பல்வேறு இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், ‘பங்சா ஜோகூர்’ கொள்கையை முன்னெடுத்து அனைத்து மக்களுக்கும் குரல் கொடுக்கும் பிரதிநிதியாக பன்னீர்செல்வத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.




















