கோலாலம்பூர்:
கம்போங் சுங்கை பாருவில், நேற்று நடந்த வீடுகள் வெளியேற்ற நடவடிக்கை, நீதிமன்ற உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக, மேற்கொள்ளப்பட்டது என்று, பிரதமர் துறை கூட்டுரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்தார். இந்த முடிவு, அரசாங்கத்தால், மட்டும் எடுக்கப்படவில்லை என்றும், இது நீதித்துறையின் உத்தரவின் பெயரில் எடுக்கப்பட்டது என்றும், எனவே அது மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து, இந்த மறுவளர்ச்சித் திட்டத்திற்கு, ஒப்புக்கொண்டனர் என்றும், அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் திருப்தியடையாதவர்கள், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அதை எதிர்த்துப் போராட உரிமை உண்டு என்றும், அவர் நினைவூட்டினார்.
இவ்வேளையில் நேற்று வெளியேற்றத்தின்போது, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து, டாக்டர் ஸாலிஹா, வருத்தம் தெரிவித்தார்.
வெளியேற்ற நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட சலசலப்பில் , டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர், ACP Sulizmie Affendy Sulaiman, அடையாளம் தெரியாத நபரால், வீசப்பட்டக் கல்லால், தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இவ்வகாரத்தில் அமைதி காக்குமாறு, அமைச்சர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களிலோ, வன்முறையிலோ, ஈடுபட வேண்டாம் என்றும், அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினையை, நியாயமான முறையில், தீர்க்க வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) வலியுறுத்தியதாக, அமைச்சர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறை, அமலாக்கப் பிரிவினர், நேற்று பலத்தப் பாதுகாப்பின் கீழ், இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்

















