கோல தெரெங்கானு,
இங்குள்ள ஜாலான் சுங்கை இகான் சாலையில் நேற்று நள்ளிரவு நடந்த மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், 62 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் நால்வர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் ரோஹானி ஹாஷிம் (62) என அடையாளம் காணப்பட்டார். அவர், மகள் ஓட்டிச் சென்ற Perodua Aruz காரில் குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்தார் என கோல தெரெங்கானு மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி அஸ்லி மொஹமட் நூர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் Perodua Aruz, Naza Citra மற்றும் Proton Saga ஆகிய மூன்று வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. நள்ளிரவு 12.05 மணியளவில் போலீசாருக்கு தகவல் வந்தடாக அவர் கூறினார்.
ஆரம்ப விசாரணையில், ஜெர்தெஹ் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஓட்டிச் சென்ற Naza Citra எதிர்புற வழியில் நுழைந்து, பெனாங்கில் இருந்து விடுமுறை பயணமாக வந்த Perodua Aruஸை நேருக்கு நேர் மோதியது கண்டறியப்பட்டுள்ளது. மோதலின் தாக்கத்தில் சிட்ரா சுழன்று, பின்னர் கெமாமானைச் சேர்ந்த 37 வயது நபர் ஓட்டிச் சென்ற Proton Saga வாகனம் பக்கவாட்டில் மோதியுள்ளது.
Perodua Aru காரில் பயணித்தோர் காயமடைந்து சுல்தானா நூர் ஜஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் அதே மருத்துவமனையின் தடயவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டது. Naza Citra ஓட்டுனரும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
இதேவேளை, Proton Saga ஓட்டுனர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பாதிப்பின்றி தப்பினர். இந்த விபத்துக்கான விசாரணை சாலை போக்குவரத்து சட்டம் 1987 – பிரிவு 41(1)இன் கீழ் நடைபெற்று வருகிறது. பள்ளி விடுமுறை காலமாக உள்ளதால், அனைத்து வாகன ஓட்டிகளும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.




























