புத்ராஜெயா,
சபா பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்பு வசதி துண்டிக்கப்படாமல் இருக்க, மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) அவசரத் தொடர்பு PRIME சேவை வாகனங்கள் மற்றும் தேசிய தகவல் பரவல் மையம் (NADI) வழியாக சமூக இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
தொடர்பு உபகரணங்களுடன் கூடிய MCMC PRIME அவசர வாகனம், கம்போங் செந்திரகாசிஹ் மற்றும் பெனம்பாங் பகுதிகளில் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு அணிகளுக்கும் சபா எலக்ட்ரிசிட்டி (SESB)-இன் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது என MCMC தெரிவித்டுள்ளது.
இதற்கிடையில், மொத்தம் 131 NADI Centres செயல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணைய அணுகலை வழங்கி, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்க வசதியாகியுள்ளது.
தற்போது, மொத்தம் 266 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மின்சாரம் தடைபட்டதால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கு மேற்பட்ட 147 கோபுரங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ளவற்றின் சீரமைப்பு பணிகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட முறையில் நடைபெற்று வருகின்றன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் SESB உடன் இணைந்து ஒரு சிறப்பு படையை அமைத்து, நிலைமையை கண்காணித்து வருகிறது MCMC. முக்கிய சேகரிப்பு மையங்கள் மற்றும் தொடர்பு பரப்பும் முக்கிய இடங்களில் பழுதுபார்ப்பு ஒருங்கிணைப்பு, தற்காலிக மின்சார வசதி (ஜெனரேட்டர் மூலம்) வழங்கல் போன்றவை முன்னுரிமையாகச் செய்யப்படுகின்றன என MCMC இந்த அறிக்கை கூறுகிறது. .
“சபாவில் மக்கள் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்ய, மீட்பு முகமைகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மாநில, கூட்டாட்சி அரசாங்கங்களுடன் இணைந்து, தொடர்பு மற்றும் இணைய சேவைகள் விரைவில் மீள நிறுவப்படும்,” என MCMC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.





















