மலேசியாவில் குடிநுழைவு சோதனைக்காக புதிய “MyNIISE” செயலி அறிமுகம்; வரும் திங்கள்கிழமை முதல் சிங்கப்பூரர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்

கோலாலம்பூர் :

மலேசியா, தனது தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையான (NIISe) சோதனையை விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக “மைநைஸ்” (MyNIISE) எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியைப் பதிவிறக்கிக் கொண்டால், மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் உள்பட 63 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், விரைவு தகவல் (QR) குறியீட்டைக் கொண்டு நாட்டின் குடிநுழைவுச் சாவடிகளை கடக்கலாம்.

முதலில், சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்லும் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் சோதனை தொடங்கப்படும். ஜோகூர் செல்லும் சிங்கப்பூரர்கள் வரும் திங்கள்கிழமை (22/8/2025) முதல் இந்த செயலிமூலம் QR கோட்டை பயன்படுத்தி பயணிக்கலாம், இதற்கு கடப்பிதழ் தேவையில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நடைபெறும் இந்த சோதனைக்குப் பிறகு, கோலாலம்பூர் 1, 2 முனையங்கள், பினாங்கு, கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு விமான நிலையங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜோகூரில் உள்ள இரு குடிநுழைவுச் சாவடிகளை அன்றாடம் சுமார் 3 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மைநைஸ் செயலி மூலம் குழுவாகச் செல்லும் பயணிகள் ஒரே QR குறியீட்டைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

தற்போது மலேசியர்கள் “மைபோர்டர்பாஸ்” (MyBorderPass) செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனை தனிப்பட்ட முறையில் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மைநைஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த வரம்பு நீங்கும்.

மேலும், ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் (RTS) முழுமையாக செயல்படும் போது கூட, மைநைஸ் செயலி அங்கு பயன்படுத்தப்படும். ஒற்றைக் குடிநுழைவுத் திட்டத்தின் கீழ், ரயில் பயணிகள் சிங்கப்பூரிலும் ஜோகூரிலும் உள்ள நிலையங்களை விட்டு வெளியேறும் போது இதே QR வருடும் முறையை பின்பற்றுவார்கள் என மலேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், தனது இரு நிலச் சோதனைச் சாவடிகளிலும் QR முறையை 2024 மார்ச் மாதத்தில் செயல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here