காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம்

“உங்களின் உள்ளே ஓர் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது உங்களின் உள்ளே உயிரின் நடனம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அதைக் காண விரும்புகிறீர்களா?”

முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தான்.  நிறைய பணம் சம்பாதிப்பதுதான் அவனது குறிக்கோளாக இருந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் வீட்டு வாசலில் அழகான தோற்றத்தோடு ஒரு மனிதர் வந்து தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்து, “இந்தக் கல்லால் நீ ஓர் உலோகத்தைத் தொட்டால் அந்த உலோகம் தங்கமாக மாறிவிடும். நீ வேண்டுமளவிற்கு இந்தக் கல்லை உபயோகித்துக்கொள். குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு நான் திரும்பவும் வந்து இந்தக் கல்லைப் பெற்றுக்கொள்வேன். அப்போது எந்தவொரு தயவு தாட்சணையும் கிடையாது. நாளை மறுநாள் கொடுக்கிறேன் எனச் சாக்குபோக்கு சொல்லக் கூடாது.” என்று எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார்.   

அந்த வியாபரிக்குப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற தன்னுடைய பலநாள் கனவு நனவாகியது போல் இருந்தது.  அந்தக் கல்லினால் உலோகத்தைத் தொட்டால் அது உடனே தங்கமாக மாறிவிடும் என்பதால் அந்த வியாபாரி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால், அவன் கவனமாகச் செயல்பட எண்ணி உலோகத்தின் விலை  சற்றுக் குறையும் வரை காத்திருப்போமென முடிவெடுத்தான். ஆகையால், ஒவ்வொருநாளும்  உலோகத்தின் விலை குறையுமென்று தொடர்ந்து அவன் காத்துக்கொண்டே இருந்தான். ஆனால், உலோகத்தின் விலை குறையவே இல்லை. மென்மேலும் கூடிக்கொண்டேதான் போனது.  

ஒருநாள் அவன் வீட்டு வாசலில் அந்தக் கல்லைக் கொடுத்த மனிதர் வந்து “என்னுடைய கல்லைத் திரும்பக் கொடு,” என்றார்.  திடுக்கிட்ட அந்த வியாபாரி, ” ஒரு வினாடி பொறுங்கள், என் வீட்டில் எதாவது உலோகம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்,” என்று பதற்றத்தோடு கூறினான். அதற்கு அந்த மனிதர், “முடியாது, மறந்துவிட்டாயா? ஒப்பந்தப்படி நான் வந்திருக்கிறேன். என் கல்லை என்னிடம் திரும்பக் கொடுத்துவிடு,” எனக் கூறி அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு  போய்விட்டார். 

நாம் அனைவரும் அந்த வியாபாரி போன்றவர்கள்தான்.  ஒருவர் வந்து நமக்கு இந்த உயிர் எனும் அற்புதத்தைக் கொடுத்து,  இதன் மூலம் உன் கனவுகளை நிறைவேற்றிகொள். மகிழ்ச்சியாக இரு. நிறைவோடு இரு.” என்கிறார். ஆனால்,  நாமோ, “இப்போது வேண்டாம்,  எனக்கு  என் கடமைகள் இருக்கின்றன, பிறகு  பார்க்கலாம்,  எனக்கு இப்போது நேரமில்லை, எனக்கு வயதாகட்டும்,” எனச் சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்கிறோம். சற்று சிந்தித்துப்பாருங்கள், இந்த உயிர் என்ற அற்புத கல் நம்மிடம் இருப்பதால்தான் நம்மால் அனைத்தையும் செயலாற்ற முடிகிறது. ஆனால், நாம் இந்த உயிர் எனும் அற்புதத்திற்கு மதிப்பளிப்பதே இல்லை.  

நமக்கு வயது ஆக ஆக நேரம் குறைந்துகொண்டே வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள மறந்துவிடுகிறோம்.  பிறகு ஒருநாள், படைத்தவர் வந்து  இந்த உயிர் எனும் அன்பளிப்பைத் திரும்பக் கொடு,” என்கிறார். அப்போது நாம், “ஐயோ நான் இதைச் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமே, அதைச் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமே. “  எனப் பதறுவோம், பரிதவிப்போம். ஆனால், அப்போது எந்தவொரு தயவு தாட்சணையும் கிடையாது. இந்த வாழ்வெனும் அன்பளிப்பைக் கொடுத்தவர் வந்து  திரும்ப எடுக்கவேண்டிய இறுதி நேரம் வரும்போது நாம் கொடுத்தே ஆகவேண்டும். நாளை, நாளை மறுநாள் என ஒருநாள் ஒரு நிமிடம் ஏன் ஒரு தருணம்கூட நமக்குக் கிடையாது. ஆகையால், ஒரு விஷயம் உங்களை விட்டு சென்றப் பிறகு அதன் மதிப்பை உணர்வது விவேகமல்ல.  உங்களிடம் ஒருபொருள் அளவுக்கதிகமாக இருக்கும்போதே அதன் மதிப்பை உணர்வதில்தான் விவேகம் உள்ளது.  எனவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம்.

கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு  மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள்  வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:

www.premrawat.com

ullathinkural.com

www.timelesstoday.tv

https://www.youtube.com/@PremRawatOfficial

https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here