கோலாலம்பூர்:
மலேசியாவில் COVID-19 தொற்று நோயுடன் தொடர்புடைய புதிய ‘XFG’ வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அமாட் உறுதிப்படுத்தினார்.
35வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME 35/2025) பதிவான மொத்த 43,087 நோய் தொற்றுக்களில் 8.2% ‘XFG’ மாறுபாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
“சமீபத்திய மரபணு கண்காணிப்பு (genomic surveillance) தரவுகள் அடிப்படையில், 34% நோய் தொற்றுக்கள் NB.1.8.1, 18.1% JN.1, 13.3% XEC, 8.2% XFG, மற்றும் 21% பிற மாறுபாடுகள் என்று காட்டுகின்றன,” என்று சுகாதார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை தனது X பக்கத்தில் குறிப்பிட்டார்.
முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் நோய் தொற்றுக்கள் குறைந்துள்ளன, ஆனால் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது கவலை தருகிறது என்று அவர் கூறினார்.
அமைச்சர் மேலும், கடந்த ஆண்டு இதேகாலப்பகுதியில் பதிவான 85,297 நோய் தொற்றுக்களுடன் நோக்குகையில், இந்த ஆண்டு 43,087 ஆக நோய் தொற்று குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த 91 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார், இதனால், 2025ஆம் ஆண்டின் மொத்த COVID-19 மரண எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















