கோலாலம்பூர்:
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கப்பட்ட அழைப்பு, ஆசியான் தலைவராக மலேசியாவின் பொறுப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும்; மாறாக எந்தவொரு தலைவரின் கொள்கைகளையும் அங்கீகரிப்பதாக அல்ல என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.
ஆசியான் அமைப்பின் தலைவராக இருக்கும் மலேசியா, பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக தனது நிலைப்பாட்டை நேரடியாக அந்த அமெரிக்கத் தலைவரிடம் வெளிப்படுத்த அவரின் இந்த வருகை ஒரு வாய்ப்பாக அமையும் , மேலும் மலேசியா மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளை உறுதி செய்யும் பணியில் உள்ளது. எனவே உலக அரங்கில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் துங்கு அபைதா கூறினார்.
இதற்கு “டிரம்ப் வருகையை நிராகரிப்பது தீர்வல்ல. ராஜதந்திரம் என்பது உண்மையை நேரடியாகச் சொல்ல வேண்டும், அதைத் தவிர்க்கக் கூடாது. மலேசியா எப்போதும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கும். அதேசமயம், வளமான மற்றும் நிலையான பிராந்தியத்தை உருவாக்கும் பொறுப்பையும் ஆசியானில் நிறைவேற்றும்,” என அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டித்து வருகிறார், மேலும் காசா பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் குரல் கொடுக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்றும் பிரதமர் அலுவலகம் மேலும் வலியுறுத்தியது.



















