கென்யா, சோமாலியாவில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி

நைரோபி:

கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கு உதவிக்கரம் நீட்டி வரும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. இந்தநிலையில் தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்தது. இதில் ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆகிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் பலியாகினர். மேலும் பல வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு சோமாலியாவின் ஜூபாலாண்ட் மாநிலத்தில் உள்ள லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை அடைய அவசர மற்றும் மீட்புப் பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

இதேபோல் அண்டை நாடுகளான கென்யா, எத்தியோப்பியாவிலும் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

துறைமுக நகரமான மொம்பாசா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களான மன்டேரா மற்றும் வஜிர் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் திடீர் வெள்ளம் 241 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துள்ளது என்றும் 1,067 கால்நடைகளை கொன்றது என்றும் கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here