கோலாலம்பூர் :
வரவிருக்கும் தீபாவளி வார இறுதியில் (அக்டோபர் 17 முதல் 20 வரை) சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகளால் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகமான காத்திருப்பு நேரம் எதிர்பார்க்கப்படுவதோடு, மின்சிகரெட் கடத்தலைத் தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ICA தெரிவித்ததாவது, சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 5 முதல் 15 வரை நடந்த பள்ளி விடுமுறைக் காலத்தில், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக மொத்தம் 5.8 மில்லியன் பயணிகள் கடந்துள்ளனர்.
அவற்றில் மட்டும் செப்டம்பர் 5ஆம் தேதி 575,000க்கும் மேற்பட்டோர் அந்தச் சாவடிகள் வழியாக பயணம் செய்ததாகவும், கார்கள் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே, வரவிருக்கும் தீபாவளி விடுமுறை நாட்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு பயணிக்கத் திட்டமிடுவோர் போக்குவரத்து நிலவரத்தை முன்கூட்டியே சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) One Motoring இணையதளம் அல்லது Expressway Monitoring and Advisory System (EMAS) மூலமாக உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகளின் போக்குவரத்து நிலையை நேரடியாக அறிந்து கொள்ளலாம்.




















