தேர்தல் பிரசாரம் செய்வதில் இருந்து வடிவேலு நழுவல்: கருணாசுக்கு வாய்ப்பு தி.மு.க. அதிரடி முடிவு

வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வந்தவர். 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அவரது துரதிருஷ்டம் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் வடிவேலுவின் சிரிப்பும் அடங்கிப் போனது. சினிமா வாய்ப்புகள் அரிதான நிலையில் தனது 2-வது இன்னிங்சை மாமன்னன் படத்தின் மூலம் தொடங்கினார். அமைச்சர் உதயநிதியுடன் நடித்த அந்த படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து அவரது 2-வது இன்னிங்ஸ் விறுவிறுப்பானது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு அழைத்தனர். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார். அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய நடிகர்-நடிகைகள் அதிகம் இருப்பதால் தி.மு.க.வும் திரை நட்சத்திரங்களை அதிக அளவில் எதிர்பார்த்தது. இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக கருணாசை பயன்படுத்த தி.மு.க. முடிவு செய்தது. அதற்கு கருணாசும் ஒத்துக்கொண்டார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 10 நாட்கள் பிரசாரம் செய்யும்படி தி.மு.க. மேலிடம் அறிவித் துள்ளது. கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த பயண பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here