சென்னை,பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சவுந்தர்யா. இவரிடம் கடந்த ஆண்டு மோசடி கும்பல் ஒன்று மிரட்டி பணத்தை பறித்துள்ளது. அதாவது, பிக்பாஸ் நடிகை சவுந்தர்யாவிடம் பெட்எக்ஸ் (FedEx) கொரியர் பெயரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளார். பின்னர், போலி ஆவணங்களை அவரது தொலைப்பேசிக்கு அனுப்பி டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளனர். காணொலி அழைப்பு மூலம் மிரட்டி, வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகை சவுந்தர்யா போலீசிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் பணத்தை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், நடிகை சவுந்தர்யா இந்தச் சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும், தேவையற்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என கூறியும் நடிகை சவுந்தர்யா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.