ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் லெவோட்டோபி லாக்கி லாக்கி (Lewotobi Laki Laki) எரிமலை, இன்று புதன்கிழமை (அக்டோபர் 15) அதிகாலை வெடித்தது.
வெடிப்பின் தாக்கத்தில் எரிமலையிலிருந்து எழுந்த சாம்பல் மேகம் வானில் சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
இந்த எரிமலை கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.35 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டதாக இந்தோனீசிய புவியியல் ஆணையம் (PVMBG) அறிவித்துள்ளது.
வெடிப்பு சுமார் ஒன்பது நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எரிமலை வெடித்தபின் மழை பெய்தால், சாம்பல் மற்றும் சேறு கலந்து பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எரிமலைக்கு அருகில் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஆகஸ்ட் மாதத்திலும் இத்தோட்ட எரிமலை வெடித்தது. அதற்கு முந்தைய ஜூலை மாதத்திலும் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அருகிலுள்ள பாலி தீவில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.























