தாவாவ்:
Jalan Kalabakan–Maliau Basin,பகுதியில், சுமார் ஒரு வாரமாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட 31 வயது நபர் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கைருல் சஹாரின் என அடையாளம் காணப்பட்ட இவர், காலை 7.43 மணியளவில் பெர்மாடாங் பகுதியில் பொதுமக்கள் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று, சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்டுள்ளது.
கைருல் அக்டோபர் 15 அன்று தனது உறவினருடன் காட்டில் மீன்பிடிக்கவும், வனப்பொருட்களைத் தேடியும் சென்றபோது, முகாமுக்கு திரும்பும் வழியில் உறவினரும் பாதிக்கப்பட்டவரும் பிரிந்தனர், அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக உறவினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை தொடங்கப்பட்டது.
கைருலைத் தொடர்பு கொள்ள உறவினர் வாட்ஸ்அப் வழியாக முயன்றபோதும், அவரது மொபைல் பேட்டரி தீர்ந்துவிட்டது என கூறப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஆரம்ப தேடல் முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் தீயணைப்பு துறை, காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை, சமூக ரேஞ்சர்கள், ட்ரோன் குழு மற்றும் சுமார் 90 கிராமவாசிகள் இணைந்து ஒருங்கிணைந்த SAR நடவடிக்கையை மேற்கொண்டனர்.
“கைருல் சீரான உடல்நிலையுடன் காணப்பட்டார். மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கலாபகான் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று தீயணைப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





















