பாங்கியில் வீடு புகுந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் கைது

கோலாலம்பூர்:

பண்டார் பாரு பாங்கி பிரிவு 3-இல் உள்ள ஒரு குடியிருப்பில் வீடு புகுந்து, இரண்டு வாகனங்களைத் திருடியதாக கூறப்படும் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

62 வயதான வீட்டு உரிமையாளர் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு உடைக்கப்பட்டதை கவனித்து, காலை 7.45 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தார் என்று, காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான மெர்சிடீஸ்-பென்ஸ் மற்றும் பெரோடுவா கெலிசா எனும் இரண்டு கார்கள், மேலும் தனிப்பட்ட ஆவணங்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.

புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஜாங் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு (D4) அதிகாரிகள் நடத்திய சோதனையில், 29 மற்றும் 32 வயதுடைய இரு ஆண்கள் செராஸ் பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பின், அவர்களிடமிருந்து போலீசார் காணாமல் போன இரண்டு வாகனங்களையும், கைப்பையும், பதிவு எண் தகடுகள் மற்றும் சாலை வரி ஆவணங்களையும் மீட்டுள்ளனர்.

மேலும் சோதனையில், இரு சந்தேகநபர்களுக்கும் 13 குற்ற வழக்குகள் மற்றும் 9 போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான முந்தைய பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

சோதனையின் போது இருவரும் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இரு சந்தேகநபர்களும் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457 (வீடு புகுந்து திருட்டு), பிரிவு 379A (வாகனத் திருட்டு) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷாருல்ஹாஸ்ராம் ராம்லியை 017-2530380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here