கோலாலம்பூர், அக்டோபர் 9 –
பாக்கானில் உள்ள ஜாலான் பெடானும் (Jalan Pedanum) பகுதியில் நிலத்தடி மின்சாரக் கேபிளைத் திருட முயன்ற சந்தேக நபர்களைக் காவல்துறை தேடி வருகிறது.
ஜூலாவ் காவல்துறைத் தலைவர் DSP அலிஃப் ஹைக்கல் ரமேஷ் அப்துல்லா இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கையில், நேற்று காலை 9 மணியளவில் வழக்கமான ஆய்வின் போது சரவாக் எனர்ஜி பொறியியலாளர் ஒருவர் இதனை கண்டுபிடித்தார்.
இதனிடையே, அலுமினியக் கேபிள், கூர்மையான பொருள் அல்லது கிரைண்டர் மூலம் பாதி வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கேபிளின் மேல் பகுதி இன்னும் கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்ததால், திருடர்கள் அதனை எடுக்காமலேயே தப்பி ஓடியுள்ளனர். இந்தப் பகுதி பக்கானில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில், விளக்குகள் அல்லது CCTV இல்லாத ஒரு தூரமான செம்பனை தோட்டத்தில் (oil palm area) இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் சுமார் RM4,000 ரிங்கிட் சேதம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை இந்தச் சம்பவத்தை குற்றவியல் சட்டம் பிரிவு 431A இன் கீழ் விசாரித்து வருகிறது. இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.





















