உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள்.
மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், “மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது.” என தெரிவிக்கிறது.
“நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது” எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், “இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்” எனவும் தெரிவித்துள்ளது.