கோலாலம்பூர்:
சீனாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா வரை, மலேசியாவின் டுரியான் பழங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் டுரியானுக்கான தேவை அண்மைய ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
மலேசியாவில் கடந்த சில ஆண்டுகளில் டுரியான் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், டுரியான் சாகுபடி நிலப்பரப்பும் மெதுவாக அதிகரித்து வருகிறது.
2020 முதல் 2024 வரை ஐரோப்பிய நாடுகளுக்கான மலேசிய டுரியான் ஏற்றுமதி 162% உயர்ந்துள்ளது. வட அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 5.2% அதிகரித்துள்ளது; மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி 8.8% உயர்வு கண்டுள்ளது.
இந்தத் தகவல்களை மலேசிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
“உயர்தர டுரியான் பழங்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ‘மூசாங் கிங்’ வகை டுரியானை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விரும்புகின்றனர்,” என்று அமைச்சர் கூறினார்.
அதேநேரம், டுரியான் ஏற்றுமதியை மேலும் விரிவாக்கவும், மலேசிய டுரியானின் சிறப்புகளை உலகம் அறியச் செய்வதற்கான விளம்பர நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு, சீனாவுக்கு மட்டும் 367.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டுரியான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஹாங்காங்குக்கு 31.3 மில்லியன், சிங்கப்பூருக்கு 23.5 மில்லியன், இந்தோனீசியாவுக்கு 18 மில்லியன், அமெரிக்காவுக்கு 11 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டுரியான் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த டுரியான் ஏற்றுமதி 176.7 மில்லியன் ரிங்கிட் மட்டுமே இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 367 மில்லியனாக உயர்ந்துள்ளது.
‘பழங்களின் அரசன்’ என அழைக்கப்படும் டுரியானை மலேசியா தற்போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் கனடா, ஜப்பான், தென்கொரியா, கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
தற்போது மலேசியாவில் மொத்தம் 1,933 டுரியான் தோட்டங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.



















