கோலாலம்பூர்:
இந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவின் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 13% விழுக்காடு குறைந்து 2,132,578 ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,452,010 பேராக பதிவானது. இந்த கணிசமான எண்ணிக்கை குறைவடைந்ததற்கு, அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளது என்று துணை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் கூறினார்.
இந்தாண்டு “உற்பத்தித் துறையில் 622,388 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து கட்டுமானம் (589,684), சேவைகள் (390,607), தோட்டக்கலை (263,131), விவசாயம் (158,628), வீட்டு உதவியாளர்கள் (107,375) மற்றும் சுரங்கம் மற்றும் குவாரித் துறை (765) உள்ளனர்,” என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
துறை வாரியாக வெளிநாட்டு தொழிலாளர் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் மனிதவள பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகள் குறித்து டத்தோ அவாங் ஹாஷிம் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கொண்டவாறு பதிலளித்தார்.
கட்டுமானம், சேவைகள், தோட்டக்கலை, விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரி ஆகிய ஆறு முக்கிய முறையான துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.
தொழில் முறைசாரா துறையில் வெளிநாட்டு வீட்டு உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
12வது மலேசியா திட்டத்தின் கீழ், தேசிய பணியாளர்களில் 15% க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு இருக்கக்கூடாது என்று அரசாங்கக் கொள்கை வரையறுக்கிறது.
13வது மலேசியா திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் இதை 10% ஆகவும் 2035 ஆம் ஆண்டுக்குள் 5% ஆகவும் குறைப்பதே இந்த இலக்குகளின் நோக்கமாகும்.



















