சுடும் உண்மைகள் – பணம் கை மாறியதா?

பி.ஆர்.ராஜன்

வாங் கம்போங் ஸ்ரீ     தெரத்தாய் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் வீற்றிருக்கின்ற  கம்போங் முகம்மட் தாய்பிப்பில் சில இந்தியக் குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த ஆலயத்திற்கு பக்கத்தில் 6 லோட் நிலம் காலியாக இருந்தது.

இந்த இடத்தை வங்காளதேச ஆடவர் ஒருவர் அவரின் மனைவியின் பெயரில் வாங்கியிருக்கிறார். இந்த கம்பத்தில் உள்ள முதல் வீட்டிற்கும் காலியாக இருந்த இந்த 6 லோட் நிலத்திற்கும் இடையே ஒரு சாலையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலத்தில் வீடுகள் மட்டுமே கட்டப்படுவதற்கு அனுமதி உள்ளது. இந்நிலையில் இந்த வங்காளதேச ஆடவர் உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் விதிமுறைகளை மீறி ஒரு வங்காளதேச உணவகத்தை நிர்மாணித்து வருகின்றார். அதன் கட்டுமானப் பணிகள் 60 விழுக்காடு நிறைவு பெற்றிருக்கின்றது.

ஆலய நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ், உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகம் ஆகியவற்றிடம் புகார் செய்திருக்கிறது. இந்த நிலத்தின் நடப்பு உரிமையாளர் ஒரு மலேசியர்  என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஓர் உணவகம் நிர்மாணிக்கப்படுகிறது என்பது விதிமுறைகள் மீறல் என்பதால் உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு பணிகளை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்த அந்த வங்காளதேச ஆடவர் மீண்டும் கட்டுமானப் பணியை தொடங்கி இருக்கிறார்.

இந்த விவகாரத்தை உலுசிலாங்கூர் நகராண்கமைக் கழக கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேரடியாக களம் இறங்கிய அவர் இங்கு கடையை நிர்மாணிக்கக் கூடாது . இது முற்றிலும் ஒரு விதி மீறல் என்று எச்சரித்து உலுசிலாங்கூர் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை வரவழைத்து 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்திய அந்த வங்காளதேச ஆடவர் 2 வாரங்களுக்கு பின்னர் மீண்டும் கட்டுமானப் பணியைத் தொடங்கியிருக்கிறார். 2ஆவது தடவையாக மீண்டும் 20,000 ரிங்கிட்  அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் அவர் செலுத்தி விட்டு கட்டுமானப் பணியைத் தொடர்ந்து இருக்கிறார். ஆலயத் தரப்பில் மீண்டும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவில் தரப்பினரை அழைத்து வங்காளதேச ஆடவரும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிய அவரது மனைவியும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆலய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்த மதம் மாறிய பெண் இந்த கம்பத்திலேயே வாழ்கின்றவர். சிறு வயதிலிருந்து இந்த கம்பத்தில் வாழும் அவர் வங்காளதேச ஆடவரை மணந்து கொண்டு மதமும் மாறினார்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது தாங்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவிக்க முடியாது என்று ஆலயச் செயலாளர் பாஸ்கரன் இரசன் தெரிவித்தபோது, பொங்கி எழுந்த அந்த மதம் மாறிய பெண் இந்தியா பாபி (இந்தியர்கள் பன்றிகள்) என்று ஒரு இழிசொல்லை பயன்படுத்தியிருக்கிறார். வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளில் முடிந்தது.

இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. பாஸ்கரன் அந்த வங்காளதேச ஆடவர், அவரின் இன்னொரு மனைவி ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸ் தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளது. கைகலப்பு நடத்தும் அளவுக்கு வார்த்தைக்கு தீமூட்டிய அந்த மதம் மாறிய பெண் இன்றளவும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் அந்த வங்காள தேச ஆடவர் இவ்வளவு துணிச்சலாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்பதை விசாரித்து பார்த்தபோது, உலுசிலாங்கூர்  நகராண்மைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவர் பணம் கொடுத்திருக்கிறார் என்ற விஷயம் கசிந்தது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் அதனை நம்பாமல் முற்றாக நிராகரிக்கவும் இயலவில்லை.

நெருப்பில்லாமல் புகையாது. இதில் ஓர் உண்மை மறைந்திருக்கிறது. இதனை உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி பின் நோர் முகமட்  இந்த விவகாரத்தை  தீவிரப் புலன் விசாரணை செய்து, உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2024 மார்ச் 22 ஆம் தேதி இந்த சர்ச்சைக்குரிய இடத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவுடன் வருகை புரிந்த உலுசிலாங்கூர் நகராண்மைக்கழக துணைத்  தலைவர்  அலாவுடின் ஸக்காரியாவிடம் அங்கு வசிக்கும்  பொதுமக்கள் இந்த விவகாரத்தில் பணம் கை மாறி இருக்கிறது என்று பட்டவர்த்தனமாக முறையிட்டனர்.

இதைக் கேட்டதும் முகம் சிவந்து போன அவர், இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. உறுதியாக விசாரித்து யாராவது இதில் சம்பந்தப்பட்டிருந்தால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த வங்காளதேச ஆடவருக்கு கம்போங் ஸ்ரீ தெரத்தாயில் ஒரு சொந்த வீடு இருக்கிறது. கம்போங் கொஸ்கானில் 2 லோட் நிலத்தை வாங்கி சாப்பாட்டுக் கடை, கார் கழுவும் பட்டறை, இளநீர் விற்பனைக் கடை, பலசரக்கு கடை என நிர்மாணித்து அனைத்தையும் வாடகைக்கு விட்டிருக்கிறார் என்ற தகவலும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here